×

சொத்து வரி செலுத்த தவறியவர்களின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சி மக்களுக்கு, நகராட்சி ஆணையர் கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவேற்காடு நகராட்சி 18 வார்டுகைள உள்ளடக்கிய சிறப்புநிலை நகராட்சியாகும். சொத்துவரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றில் இதுவரை 65 சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 35 சதவீத தொகை நிலுவையாகவே உள்ளது. இவற்றில் குடிநீர் கட்டணம் மற்றும் காலிமனை வரி மிகவும் குறைவான சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

திருவேற்காடு நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தொழில் செய்து வரும் பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்களது ஊதியத்துக்கு ஏற்றார்போல் தொழில்வரி பிடித்தம் செய்து, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்ட விதிகளின்படி, 2023-24ம் ஆண்டு வரையிலான தொழில்வரியை நிலுவையின்றி உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.

நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் நிலுவையில் உள்ளதால், நகரில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதிலும், ஊழியர்களுக்கான ஊதியத்தை உரிய காலத்தில் வழங்க இயலாத சூழ்நிலையும் உருவாகிவிடும். வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வரிகளை செலுத்தி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரி, கட்டணங்களை செலுத்த தவறியவர்களின் குடிநீர் இணைப்பு நகராட்சிப் பணியாளர்கள் மூலம் துண்டிக்கப்படும்.

மேலும், அதிகளவு வரி நிலுவை வைத்துள்ளவர்கள் விவரம் மின்சாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மின் துண்டிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோன்று, காலி மனை வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, சொத்து பரிமாற்ற பதிவு நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஜப்தி நடவடிக்கையுடன் சட்ட ரீதியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் வசதிக்காக தினசரி காலை 8.30 முதல் மாலை 7 மணி வரை மற்றும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் பணி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post சொத்து வரி செலுத்த தவறியவர்களின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Tiruvekadu Municipality ,Municipal Commissioner ,Ganesan ,Tiruvekadu ,Municipality ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ